திமுகவில் இருந்து விலகல்.. தவெகவில் இணைந்தார் இன்ஸ்டா பிரபலம் பிரியங்கா மஸ்தானி!
தமிழக அரசியல் களத்தில் இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களின் ஈர்ப்புப் புள்ளியாக மாறி வரும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் தமிழகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பிரியங்கா மஸ்தானி முறைப்படி இணைந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா மஸ்தானி, ஆரம்பத்தில் நைட்டி அணிந்து கொண்டு யதார்த்தமான முறையில் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. வெறும் நடனத்தோடு நின்றுவிடாமல், உடற்கட்டமைப்புப் (பாடி பில்டிங்) போட்டிகளில் தீவிரமாகப் பங்கேற்றுப் பல்வேறு மாநில மற்றும் மண்டல அளவிலான விருதுகளையும் வென்று சாதனை படைத்தார்.
சமூக ஊடகங்களில் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகித் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
அரசியல் ரீதியாக இதுவரை தீவிர திமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த பிரியங்கா மஸ்தானி, தற்போது திமுகவில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் பிரியங்கா மஸ்தானி தவெகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். அவருக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் தவெகவின் அடையாளக் துண்டை அணிவித்து வாழ்த்துகளுடன் வரவேற்றார். சேலம் மண்டலத்தில் வலுவான செல்வாக்குடைய ஒரு சமூக ஊடகப் பிரபலம் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
