"விஜய் உட்பட 234 தொகுதியிலும் தவெக டெபாசிட் காலி... ஆதாரங்களை சங்கீதாவே வெளியிடுவார்” - பி.டி.செல்வகுமார் ஆவேசம்!

 
சங்கீதா சங்கீதா

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்து, அவரது முன்னாள் மேலாளரும் திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார் நெல்லையில் இன்று வெளியிட்ட விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், அவரது முன்னாள் மேலாளரும், தற்போது திமுக வர்த்தக அணி துணைச் செயலாளருமான தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நெல்லை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சங்கீதா

"வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் உட்பட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்கள்" என பி.டி. செல்வகுமார் சவால் விடுத்துள்ளார். விஜய்யை நம்பி தமிழகத்தின் இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 234 தொகுதிகளிலும் தவெக-வுக்கு எதிராகத் தான் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்த செல்வகுமார், "6 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைப் பற்றிக் கேள்வி கேட்க ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதியில்லை. அவர் ஒரு தற்குறி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். மோசடி செய்து முன்னேறிய ஒரு நபர், மக்கள் தலைவரை விமர்சிப்பது கண்டனத்திற்குரியது."

விஜய் தவெக ஸ்டாலின்

விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் உடன் இருப்பவர்களை 'பீடைகள்', 'சனியன்', 'சகடை' மற்றும் 'பான் பராக் ரவி' என மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் விமர்சித்தார். மேலும், தவெக-வில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளால் குமுறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய பி.டி. செல்வகுமார், "தனது வாழ்க்கை ஒரு நடிகையால் கெட்டுவிட்டது என விஜய்யின் மனைவி சங்கீதா ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த விவாகரத்து மற்றும் சொத்துரிமை தொடர்பான மனு நிலுவையில் உள்ளது. மனைவி வழக்குத் தொடர்ந்த பின்னரும், அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றே நடிகை திரிஷாவுடன் பொதுமேடைகளில் விஜய் ஏறி இறங்குகிறார்." அனைத்து விஷயங்களையும் இப்போதே சொல்ல முடியாது. காலம் வரும்போது விஜய்யின் மனைவி சங்கீதாவே அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவார்" எனப் பரபரப்பைக் கூட்டினார்.