காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கடலூர் உள்ளிட்ட 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாகப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் உள்பட தமிழகத்தின் முக்கியக் கடலோரப் பகுதிகளில் உள்ள 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
கடல் பகுதி மற்றும் கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், துறைமுகங்களில் நிறுத்தப்படும் படகுகளைப் பாதுகாப்பான முறையில் நீண்ட இடைவெளி விட்டு நிறுத்தவும் மீனவர்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
