பல மணி நேரமாக நகராத காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு!

 
காற்றழுத்த

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரமாக எந்தவித நகர்வும் இன்றி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான இந்தத் தாழ்வு மண்டலம் நேற்றிரவு மணிக்கு 8 கி.மீ வேகத்திலும், இன்று காலையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் மெதுவாக நகர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 மணி நேரமாக எந்தத் திசையிலும் நகராமல் ஒரே இடத்தில் தேங்கி நிலைகொண்டுள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

நகர்வு குறைந்திருந்தாலும், கடல் பகுதியில் நிலவும் சாதகமான வானிலை காரணங்களால் இந்தத் தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலுவடைந்து 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக' மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை காலையில் இது மேலும் தீவிரமடைந்து 'புயலாக' உருவெடுக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலாக வலுப்பெற்ற பின்னர், அது 'மிகத் தீவிரப் புயலாக' உருவெடுத்து வடமேற்கு திசையில் நகரும். அதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 28-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

பசிபிக் அட்லாண்டிக் கடல் புயல்

இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.