“ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் பதவி ஆசை” - துணை முதலமைச்சர் நாற்காலியைக் குறிவைத்தாரா செந்தில்பாலாஜி? - விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

 
செந்தில்பாலாஜி செந்தில் பாலாஜி

தவெக ஆட்சியைச் சட்ட ரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் கவிழ்க்கத் திட்டமிட்ட விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்துக் காவல் துறை நடத்திய விசாரணையில் முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவரும் திட்டத்தில் செந்தில்பாலாஜி ஈடுபட்டதாகப் புலனாய்வுத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குத் தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜிக்கு மிகப்பெரிய அரசியல் கணக்கு இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

செந்தில்பாலாஜி

தவெக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதன் மூலம், உதயநிதி ஸ்டாலினிடம் மிகப்பெரிய அளவில் நல்ல பெயரைப் பெற அவர் முயன்றுள்ளார். இதன் வாயிலாகத் தனக்குத் 'துணை முதலமைச்சர்' பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆட்சி அதிகாரம் மட்டுமின்றி, திமுகவின் 'துணைப் பொதுச்செயலாளர்' என்ற உயரிய கட்சிப் பொறுப்பையும் இந்தச் சாதனை மூலம் எட்டிப்பிடிக்கச் செந்தில்பாலாஜி திட்டமிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தவெக அரசுக்கு எதிராகச் சதித் திட்டங்களைத் தீட்டுவதற்காகச் சட்ட ரீதியான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பல வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி அசோக்

"ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டங்கள் குறித்த விவாதங்கள் ரகசியமாக நடந்துள்ளன. இந்த ஆலோசனைகளில் திமுகவிற்குச் சாதகமான சில முக்கிய அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது." உத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவுக்குப் பேரம் பேசப்பட்ட புகாரில் செந்தில்பாலாஜியின் தரப்பினர் ஏற்கனவே சிக்கியுள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் "துணை முதல்வர்" பதவி ஆசைக்கான கணக்குகளும் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.