பயிர்கள் நாசம்.. கடலூரில் கதறும் விவசாயிகள்... கனமழையால் 150 ஏக்கர் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம்!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முற்றிலுமாக மூழ்கிச் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் விடிய விடியப் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள வடிகால்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் வடிய வழியின்றி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 150 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் பிற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. மேலும் பல குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள வடிகால் ஓடைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளும், முறையாகத் தூர்வாரப்படாமல் ஏற்பட்டுள்ள அடைப்புகளுமே மழைநீர் தேங்க முக்கியக் காரணம் என்று இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இயற்கை இடர்பாடு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துள்ள தங்களுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க வடிகால் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
