டெல்லியில் பேரழிவுச் சதி முறியடிப்பு... 7 தீவிரவாதிகள் கைது - பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவோடு ஊடுருவியது அம்பலம்!

 
தீவிரவாதிகள் தீவிரவாதிகள்

மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையாக, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தேசியத் தலைநகரப் பகுதிகளில் பெரிய அளவிலான பயங்கரவாத நாசவேலைகளில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் ஆதரவுப் பயங்கரவாதக் கும்பலின் செயல்பாடுகளை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் முறியடித்துள்ளனர்.

டெல்லி போலீஸ் உளவுத்துறையினர் நடத்திய முதற்கட்டப் புலனாய்வு மற்றும் சோதனைகளில், தலைநகரின் முக்கியப் பொது இடங்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புத் தளங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்த ஒரு பயங்கரவாதக் கும்பல் ஆட்களைத் திரட்டி வருவதாக டெல்லி போலீசாருக்கு கடந்த மே மாத இறுதியில் ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

இந்தத் தகவலின் அடிப்படையில், டெல்லி யமுனா விஹார் பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை அருகே முதற்கட்டமாகக் கண்காணிப்பு வளையத்தை ஏற்படுத்திய போலீசார், சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மோஹித் என்ற வாலிபரை முதலில் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலம் இந்த மாபெரும் நாசவேலைச் சதி வலைப்பின்னல் வெளிச்சத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்ட அனஸ் தியாகி, மோஹித், தீபக் அக்ரோலா, ஆரிஃப், கரண்வீர் சிங், ஜதன் மற்றும் சாபிர் ஆகிய 7 பயங்கரவாதக் கும்பல் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  கைதான நபர்கள் அனைவரும் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதியான ஷாஸாத் பாட்டி மற்றும் அவனது கூட்டாளி அஜ்மல் குஜ்ஜார் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பின்னணியில் இருந்து கொண்டு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவிகளை வழங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் முக்கியப் பகுதிகளை இக்கும்பல் ரகசியமாகக் கண்காணித்து (ரெககனைசன்ஸ்), அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பாகிஸ்தானில் உள்ள தங்களது கையாட்களுக்கு சமூக ஊடக மறைகுறியாக்கப்பட்ட செயலிகள் மூலம் அனுப்பிய அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 அதிநவீனத் தானியங்கி துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள், 7 கைபேசிகள் மற்றும் சொகுசு வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) மூலம் இந்தியாவிற்குள் வீசப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

ஆயுதங்களுடன் சேர்த்து, இந்தியாவின் இளைஞர்களைச் சீரழிக்கும் நோக்கோடும், பயங்கரவாதத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும் பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட பெருமதிப்புடைய போதைப்பொருட்களையும் இக்கும்பல் டெல்லிக்குக் கடத்தி வந்து சில்லறை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 7 பயங்கரவாதிகளும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய டெல்லியின் உள்ளூர் கூட்டாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய டெல்லி போலீசார் மற்றும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.