நாடு முழுவதும் பக்தர்கள் அதிர்ச்சி... சபரிமலையில் தங்கும் அறைகள் முன்பதிவிலும் மோசடி!

 
சபரிமலை

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கான தங்கும் அறைகள் முன்பதிவில் இடைத்தரகர்களைப் பயன்படுத்தி முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட்டு, 22-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. 

சபரிமலை

முதலில் மொத்தம் உள்ள 400 அறைகளில், 190 அறைகள் மட்டுமே ஆன்லைனில் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள அறைகள் சன்னிதானத்தில் நேரடியாக வழங்கப்பட்டபோது முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்ததால், 400 அறைகளும் முழுமையாக ஆன்லைன் முன்பதிவு முறைக்கு மாற்றப்பட்டன.

ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய இரண்டே நாட்களில் பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு முடிந்தன. இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், சாமி தரிசனத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட 'விர்ச்சுவல் கியூ' பட்டியலையும், அறைகளை முன்பதிவு செய்தவர்களின் விவரங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். 

சபரிமலை கூட்டம்

அப்போது, அறைகளை முன்பதிவு செய்த பெரும்பாலான நபர்களின் பெயர்கள் தரிசனத்திற்கான பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது. போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் பெரும்பாலான அறைகளை முன்கூட்டியே மொத்தமாகப் பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறைகளைச் சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு மறு வாடகைக்கு விட்டு இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியது அம்பலமானது.

இது தொடர்பாகத் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் கே.ஜெயக்குமார் கூறுகையில், "சன்னிதான விருந்தினர் இல்ல அறைகள் மிகக் குறுகிய காலத்தில் முன்பதிவு செய்து தீர்ந்துபோன விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது வெளிநபர்களின் குறுக்கீடுகளோ உள்ளதா என்பது ஆராயப்படும். இதில் தேவஸ்தான ஊழியர்களுக்கோ அல்லது வெளிநபர்களுக்கோ தொடர்பு இருப்பது உறுதியானால் அவர்கள் மீது பாரபட்சமின்றிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.