பக்தர்களே உஷார்.. திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை!
திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி திருமலை இரண்டாம் மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுத்தைப்புலி ஒன்று உலாவுவதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வாகன ஓட்டிகள் உடனடியாகத் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், சிறுத்தைப்புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் அதைக் உடனடியாகப் பிடிக்க முடியவில்லை.
மலைப்பாதைகளில் செல்லும் கார், ஜீப் போன்ற தனியார் வாகன ஓட்டிகள் நடுவழியில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்த வேண்டாம். இரு மலைப்பாதைகளிலும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பயணம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்வதைத் தவிர்த்து, குழுவாகச் செல்ல வேண்டும்.

மலைப்பாதையோரம் சிறுத்தைப்புலிகள் அல்லது வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
