திருச்சானூரில் குவியும் பக்தர்கள்... இன்று ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவிலில் வரலட்சுமி விரத பூஜை கோலாகலம்!
ஆந்திர மாநிலம் திருச்சானூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி கோயில் வளாகத்தில் இன்று வரலட்சுமி விரத மஹோத்ஸவம் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆகம விதானப்படி பிரம்மாண்ட வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு, ஸ்ரீ பத்மாவதி தாயார் மாட வீதிகளில் பிரம்மாண்ட தங்கத் தேரில் (ஸ்வர்ண ரதம்) எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
இந்தத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தேவஸ்தானத்தின் எஸ்.வி.பி.சி தொலைக்காட்சி சேனலிலும் யூ ட்யூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
வரலட்சுமி விரதத்தின் காரணமாக அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இன்று ஒரு நாள் மட்டும் அபிஷேகம், லக்ஷ்மி பூஜை, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் பிரேக் தரிசனம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களுக்காகக் குடிநீர், மோர்க் விநியோகம், அன்னப் பிரசாதம், நிழற்பந்தல்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வழிபாட்டில் பங்கேற்கும் சுமங்கலிப் பெண்களுக்குக் குங்குமப் பிரசாதம் மற்றும் மங்களச் சரடுகள் வழங்கப்படுகின்றன.
வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், தடையற்ற தரிசன வரிசை, குடிநீர், அன்னப்பிரசாதம், பாதுகாப்பு, தூய்மை, மருத்துவ வசதிகள் மற்றும் போக்குவரத்துச் சீரமைப்பு ஆகியவற்றைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஆன்மிக உணர்வுடன் வழிபட ஏதுவாகத் திருக்கோவிலும் ஆஸ்தான மண்டபமும் வண்ண மலர்களால் அழகாக அலங்கரிக்கப்ட்டுள்ளது.
