திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்... ஒரே நாளில் ரூ.4.96 கோடி உண்டியல் காணிக்கை வசூல்!

 
திருப்பதி

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஜூன் 30 அன்று ஒரே நாளில் மட்டும் 80,167 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான பொது மக்கள் பல மணி நேரம் தர்ம தரிசன (இலவச தரிசனம்) வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஜூன் 30-க்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அன்றைய தினம் கோயிலின் வருவாய் மற்றும் பிரசாத விநியோகம் மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற்றுள்ளது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடன்களின் மூலம், அன்று ஒரே நாளில் மட்டும் ரூ.4.96 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது.

திருப்பதி

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடனான மொட்டை போடும் சேவையில், அன்றைய தினம் 28,270 பக்தர்கள் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காகத் தேவஸ்தான நிர்வாகம் கூடுதல் கவுண்ட்டர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தது. திருப்பதி ஏழுமலையானின் உலகப் புகழ்பெற்ற பிரசாதமான திருப்பதி லட்டுகள், அன்று ஒரே நாளில் மட்டும் 4.10 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

திருப்பதி

தரிசனத்திற்காக நீண்ட வரிசைகளிலும், தங்கும் அறைகளிலும் காத்திருந்த பக்தர்கள் மற்றும் திருப்பதிக்கு வருகை தந்த பொது மக்கள் என மொத்தம் 1.97 லட்சம் பேர் அன்றைய தினம் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் இலவசமாக அன்னப்பிரசாதம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட போதிலும், வார இறுதி மற்றும் மாத இறுதியை ஒட்டித் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து சீராகக் காணப்படுகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பிரசாதம் மற்றும் குடிநீர் பெறத் தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அதிகாரி தலைமையிலான குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.