திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் - இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு!

 
திருப்பதி

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டுப் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அலைமோதி வருகிறது. நேர்முக இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 18 முதல் 20 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, ஒரே நாளில் மொத்தம் 78,956 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் செலுத்திய ஒருநாள் உண்டியல் காணிக்கை மட்டும் ₹4 கோடியே 46 லட்சம் எனப் பதிவாகியுள்ளது. 31,014 பக்தர்கள் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். ஒரே நாளில் 4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் 2,80,000 பக்தர்களுக்குத் இலவச அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை

திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 3,211 பக்தர்கள் பல்வேறு மருத்துவ உதவிகளையும் சிகிச்சைகளையும் பெற்றுள்ளனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்மெண்டுகளும் நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் சிலாத்தோரணம் பகுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு காத்திருப்பு அறைகளிலும், வெளிப்புற நீண்ட வரிசைகளிலும் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு டோக்கன்கள் இல்லாத இலவச தரிசன பக்தர்களுக்குச் சாமி தரிசனம் செய்யக் குறைந்தபட்சம் 18 முதல் 20 மணி நேரம் வரை ஆகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.