பழனியில் பக்தர்கள் கூட்ட நெரிசல்... அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்!

 
பழனி கூட்டநெரிசல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடுமான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில், இன்று திடீரென ஏற்பட்ட அசாத்திய கூட்டநெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாகத் தரிசன வரிசையில் காத்திருந்த பெண் பக்தர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பழனி மலைக்கோவிலுக்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், தற்பொழுது மொஹரம் பண்டிகைக்கான அரசு பொது விடுமுறையுடன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் இணைந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைத்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே பழனியில் குவியத் தொடங்கினர்.

பழனி கூட்டநெரிசல்

பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல பிரதான படிப்பாதை மற்றும் யானைப்பாதையைப் பயன்படுத்தியதோடு, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் நிலையங்களிலும் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

கூட்டம் கட்டுப்பாட்டை மீறி அலைமோதியதால், பொதுத் தரிசன வழி மட்டுமின்றி ₹100 கட்டணத் தரிசன வரிசையிலும்  பக்தர்கள் எறும்புகளைப் போல நெரிசலில் சிக்கித் தவித்தனர். கத்தரி வெயில் காலம் முடிந்த பின்னரும் பழனியில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக, தரிசன வரிசையில் மேற்கூரை அல்லது நிழற்குடை வசதி இல்லாத பகுதிகளில் பக்தர்கள் நேரடியாக வெயிலில் நிற்க வேண்டிய சூழல் உருவானது.

பழனி

குறிப்பாக, ₹100 கட்டண வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருந்த பெண் பக்தர்கள், போதிய காற்றோட்டம் இல்லாததாலும், அசாத்திய உஷ்ணத்தாலும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து சரிந்தனர். இதனால் அங்கு தற்காலிகப் பதற்றமும், கூச்சலும் ஏற்பட்டது.

அலைமோதும் கூட்டத்தைக் கணித்து முறையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும், மலைக்கோவில் நிர்வாகத்தின் மீதும் பக்தர்கள் தங்களின் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். வரிசையில் நின்ற மக்களுக்குக் குடிக்கப் போதுமான குடிநீர் வசதியோ, வெயிலைத் தடுக்கும் நிழற்குடைகளோ முறையாகச் செய்து தரப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட முதியவர்களும், குழந்தைகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.