அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்... சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது!
சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. கடந்த ஜூலை 21-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், ஜூலை 22-ல் கொடியேற்றமும் ஜூலை 28-ல் கம்பம் நடுதலும் நடைபெற்றன.
ஆடி 18 சிறப்பு பூஜை, ஊஞ்சல் உற்சவம், சக்தி கரகம் அழைத்தல் ஆகியவை கோலாகலமாக நடைபெற்றன. கடந்த மூன்று நாட்களாகத் திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் விடிய விடியப் பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டுக் நேர்த்திக்கடன் செலுத்தியும் மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் தேரோட்டம் காலை 9 மணிக்குக் கோவில் முன்பு தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பவனி வரத் தொடங்கியது.

முதல் அக்ரகாரம், தேர்வீதி, ஆனந்தா இறக்கம், வள்ளுவர் சிலை, பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி இறக்கம் மற்றும் டவுன் போலீஸ் நிலையம் ரோடு ஆகிய பாதையில் நகரை வலம் வந்த பிறகு மதியம் 12 மணிக்குத் தேர் மீண்டும் கோவிலை வந்தடையும்.
தேரோட்டத்தை முன்னிட்டு அம்மன் வேடமணிந்த பக்தர்களின் நடனம், கேரளா செண்டை மேளம், பம்பை, நாதஸ்வர இசை, குழந்தைகளின் தடி விளையாட்டு மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாளை ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலையில் கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி சத்தாபரணம், திருவீதி உலா மற்றும் மாலை நேர மஞ்சள் நீராட்டு விழாவுடன் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.
