‘அரசியலுக்கு தனுஷ் கூட வரலாம்?.. கஸ்தூரி ராஜா பேச்சு!

 
தனுஷ் கஸ்தூரி ராஜா தனுஷ் கஸ்தூரி ராஜா

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, கோலிவுட் வட்டாரத்தில் உள்ள பிற முன்னணி நடிகர்களின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் கல்வி அறக்கட்டளை நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அவரிடம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் நடிகர் தனுஷ், எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

தனுஷ்

இதற்குப் பதிலளித்த கஸ்தூரி ராஜா, "ஜனநாயக நாட்டில் தகுதியுடைய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; மக்கள் சேவை செய்ய வர விரும்புபவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வகையில், எனது மகன்களோ (இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ்) அல்லது எனது பேரன்களோ கூட எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம்; அதில் எவ்விதத் தவறும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

சென்னையில் உள்ள அரசியல் பவர்ஃபுல் இடங்கள் குறித்த கேள்விக்குத் தனது பாணியில் பதிலளித்த அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ரஜினி தனுஷ்

"சென்னை என்று எடுத்துக்கொண்டால் பல முக்கிய இடங்கள் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம் மட்டும்தான். தமிழகத்தின் நவீன அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்ந்த அந்த இல்லம் தான், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய இடம்" எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள தற்போதைய அரசியல் சூழலில், கஸ்தூரி ராஜா தனது மகனின் அரசியல் வருகை குறித்துத் தெரிவித்துள்ள திறந்தவெளிப் பதிலும், கோபாலபுரம் குறித்த அவரது கருத்தும் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.