ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ் - கோவை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திரைத்துறையில் முன்னணி நடிகராகத் திகழும் தனுஷின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, அவற்றை முழுமையான சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்தும் முக்கிய நோக்கத்துடன் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ஒன்றிணைத்துச் சமூக நலச் சேவைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இன்று நடிகர் தனுஷின் ரசிகர் நற்பணி மன்றத்தின் மிக முக்கியமான மாநில நிர்வாகிகள் கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் தனுஷின் தீவிர ஆதரவாளர்களும், ரசிகர் மன்றப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் இணைய வழியிலும் நேரிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளைச் சமூக மேம்பாட்டுப் பணிகளை நோக்கி நகர்த்துவது குறித்தும், ஏழை எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுவரை ‘ரசிகர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் இயங்கி வந்த அமைப்புகள், திரைப்படக் கொண்டாட்டங்களைத் தாண்டிப் பொதுமக்களுக்குத் நேரடியாகப் பயன் தரும் ஆக்கபூர்வமான மற்றும் தொண்டு சார்ந்த நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பெயர் மாற்றத்தின் முக்கியக் காரணமாகும்.

இதன் மூலம் கல்வி உதவி, மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் அவசர கால நிவாரணப் பணிகள் போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். தனுஷின் இந்த புதிய மக்கள் நல முன்னெடுப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் பலருக்குப் பயனுள்ள வகையில் இந்த இயக்கம் செயல்படும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
