“பெண் என்றும் பார்க்காமல் ஆபாசமாகப் பேசுறாங்க” : தாராபுரம் பரப்புரை மேடையில் தவெக வேட்பாளர் கண்ணீர் மல்கப் பேச்சு!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசியபோது உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு மாதங்களாகத் தான் செல்போன் கூடப் பார்க்கவில்லை என்று கூறி கண்ணீர் விட்டார்.

தான் திமுகவால் பாதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அதிமுகவிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் தன்னால் இந்த இயக்கத்திற்கு வந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வருவதற்கு மக்கள் இரண்டு நாட்கள் காத்திருப்பார்கள் என்று தனது தந்தை கூறுவார் எனக் குறிப்பிட்ட அவர், இன்று முதலமைச்சர் விஜய் எம்.ஜி.ஆரின் மறுபிறவியாக இருக்கிறாரோ என்று தோன்றுவதாகவும், அத்தகைய தலைவரின் இயக்கத்தில் இணைந்ததில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
