ரயில் மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை! சக்கரம் சேதம்; பெரும் விபத்து தவிர்ப்பு

 
ரயில்

 

தருமபுரி அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் மீது பாறை உருண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் பாறை தண்டவாளத்தில் விழுந்து, ரயிலின் சக்கரப் பகுதியில் மோதியதில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர் - முத்தம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மலைப்பாதையை ரயில் கடந்து சென்றபோது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது.

இதன் காரணமாக மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு தண்டவாளத்தை நோக்கி வந்துள்ளது. அந்த பாறை ரயிலின் பக்கவாட்டு பகுதி மற்றும் சக்கரப் பகுதியில் மோதியது.பாறை ரயிலில் மோதியதால் பலத்த சத்தம் ஏற்பட்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாறை மோதியதில் ரயிலின் சக்கரப் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து ரயில் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு அருகில் உள்ள தருமபுரி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர்.

பழுது நீக்கும் பணிகள் முடிந்ததும் ரயில் மீண்டும் பெங்களூரு நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.மலைப்பாதையில் கனமழை பெய்யும் நேரங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதால், ரயில்வே அதிகாரிகள் அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி அருகே ஓடும் ரயில் மீது பாறை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.