37 நாள் போராட்டத்திற்குப் பின் மாஸ் வெற்றி - தர்மேந்திர பிரதான் ராஜினாமாவும் ஜென்-சி இளைஞர்களின் கொண்டாட்டமும்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இப்போராட்டத்தை முன்னெடுத்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்கள் டெல்லியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ச்சியாக 37 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் தீவிர போராட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஒரு புதிய இளைஞர் இயக்கம், மத்திய அமைச்சரவையையே அதிர வைத்து அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, சிஜேபி கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அஷுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி வெற்றியைத் தொண்டர்களுடன் கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர ஹோட்டல் கொண்டாட்ட வீடியோவைச் சுட்டிக்காட்டி, மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி உள்ளிட்ட விமர்சகர்கள் சிஜேபி கட்சியின் நிதி ஆதாரம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். விமர்சனங்களுக்கு 'எக்ஸ்' தளத்தில் பதிலடி கொடுத்துள்ள சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், "முந்தைய தலைமுறையினர் நினைப்பது போலத்தான் போராட்டம் இருக்க வேண்டும் என்பதில்லை. எங்களால் சாலையில் அமர்ந்தும் போராட முடியும், கோல்ட் காபி குடித்துக் கொண்டே திட்டமிடவும் முடியும், நடனமாடிக் கொண்டே வெற்றையைக் கொண்டாடவும் முடியும். 'அங்கிள், ஆண்ட்டிகள்' தொடர்ந்து குறை கூறிக்கொண்டே இருக்கட்டும், அவர்கள் எங்களைச் சகித்துக் கொண்டு தான் ஆக வேண்டும்." எனத் தனது பிரத்யேக பாணியில் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
