செம மாஸ்... தண்ணீரில் இறங்கவே அஞ்சிய சிறுமி… இன்று இந்தியாவுக்காக வரலாற்று வெண்கலம்!
சிறுவயதில் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கே பயந்த சிறுமி, இன்று சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 16 வயது நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்குவின் பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெறும் 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் தினிதி வெண்கலப் பதக்கம் வென்றார். 56.27 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய தேசிய சாதனையையும் படைத்தார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆனால், அவரது தொடக்கம் இப்படி இருக்கவில்லை. ஆறு அல்லது ஏழு வயதில் கோடை விடுமுறையின்போது பெற்றோருடன் நீச்சல் குளத்துக்குச் சென்ற தினிதி, தண்ணீரில் இறங்கப் பயந்து நீச்சல் உடையுடனேயே வீட்டுக்கு ஓடிவந்துள்ளார். பின்னர் பெற்றோர் குளத்தில் இறங்கி அவருக்கு ஊக்கம் அளித்தனர். காலப்போக்கில் நீச்சல் மீது ஆர்வம் வளர்ந்து, அது அவரது வாழ்க்கையின் முக்கிய இலக்காக மாறியது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது 14 வயதில் இந்திய அணியின் இளம் வீராங்கனையாகப் பங்கேற்ற தினிதி, தற்போது இளையோர் ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தண்ணீரைக் கண்டு அஞ்சிய சிறுமியின் விடாமுயற்சி இன்று பதக்கமாக மாறியுள்ளது
