துருவ் விக்ரம் - அனுபமா காதல் ப்ரேக்கப்?! - "மன அமைதிக்காக வெளியேறினேன்" – வைரலாகும் அனுபமாவின் இன்ஸ்டா பதிவு!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களான துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகக் கடுமையான வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான மற்றும் சுதந்திரமான பதிவு தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் இணையவாசிகளிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள 'பைசன்' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
அதற்கேற்றார் போல், இருவரும் ஒன்றாக இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகின. எனினும், தங்களின் காதல் குறித்து இருவருமே அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தனர்.
தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்டதொரு பதிவை எழுதியுள்ளார்: "இறுதியில் என் மன அமைதியைக் கண்டறிவதற்காக, சில முடிவுற்ற பாதைகளை விட்டு நான் வெளியேற வேண்டியிருந்தது. இனி என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். இதற்கு யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை; எந்தப் பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டறிந்து, என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன்."

மேலும் அவர் குறிப்பிடுகையில், "நான் மிக நீண்ட காலமாகச் சொல்ல விரும்பிய, ஆனால் சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று இருக்கிறது. எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. குணமடைவதற்கும், சுதந்திரத்திற்கும், என்னை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கும் வாழ்த்துக்கள். இறுதியாக, முழுமையாக, தயக்கமின்றி என்னுடையதாக இருக்கும் ஒரு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்" எனத் தற்போதைய தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுபமாவின் இந்தத் திடீர் பதிவு, துருவ் விக்ரம் உடனான காதல் முறிவை மறைமுகமாக உறுதிப்படுத்துவது போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'யாருடைய அனுமதியும் தேவையில்லை', 'சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று' போன்ற வார்த்தைகள் அவர் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுள்ளதைக் காட்டுவதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து துருவ் விக்ரம் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
