ரூ.1.05 கோடி மதிப்பிலான வைரக் கிரீடம்... ஷீரடி சாய்பாபாவுக்கு பக்தர் காணிக்கை!
குரு பூர்ணிமாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.1.05 கோடி மதிப்பிலான வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் மல்லாடி சீனிவாச ராவ், ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர். இந்த ஆண்டு குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு பாபாவுக்குச் சிறப்புச் செலுத்தும் வகையில், தனது குடும்பத்தினருடன் ஷீரடி சென்று ஷீரடி சாய் பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அதிகாரிகளிடம் இக்கிரீடத்தைச் சமர்ப்பித்தார். 642 கிராம் தூய தங்கத்தில் செய்யப்பட்ட இந்தக் கிரீடத்தில் விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் நவரத்தினக் கற்கள் நேர்த்தியாகப் பதிக்கப்பட்டுள்ளன.

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களைக் குறிக்கும் வகையில் ‘தசாவதார’ சிறப்பு வடிவமைப்புடன் இக் கிரீடம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபாவின் பாதத்தில் வைரக் கிரீடத்தைச் சமர்ப்பித்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகின்றன.
