மரபை மீறினாரா முதல்வர் விஜய்... கருப்பு சட்டையில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார் விஜய்!
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் விஜய், வழக்கமான பாரம்பரிய வெள்ளைச் சட்டை-வேட்டி உடைக்கு மாறாக, அடர் நீலம் கலந்த கருப்பு நிற முழுக்கைச் சட்டையில் வருகை தந்தது அரசியல் அரங்கிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் போன்ற முன்னாள் முதல்வர்கள் பிரதமரை வரவேற்கச் செல்லும் போது வெள்ளைச் சட்டை அல்லது பாரம்பரிய வெள்ளை உடைகளை அணிவதைக் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், முதல்வர் விஜய் கருப்பு நிறச் சட்டையில் சென்றது மரபு மீறல் என்று விமர்சகர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் முதல்வர் பதவியேற்ற நாமுதலே கருப்பு மற்றும் வெள்ளை கலப்புடைய உடைகளையே தனது அடையாளமாக விஜய் பின்பற்றி வருகிறார். "நமது மனம் போல் வெளிப்படையாக, எளிமையாக இருக்கவே இந்த நிறம்" என்று ஏற்கெனவே அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் இதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
"இது தமிழக அரசியலில் புதிய மாற்றம் மற்றும் 'ஸ்வாக்'" என்று விஜய் தரப்பு மற்றும் தொண்டர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், புரோட்டோகால் விதிமுறைகளின்படி முதல்வர் எந்த நிற உடை அணிய வேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து பிரதமரும் முதல்வர் விஜய்யும் இணைந்து சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தைத் தொடங்கி வைத்து, போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்த நிகழ்வு இன்றைய நாளின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாக மாறியுள்ளது.
