ரூ.1.5 கோடி செலவழித்தாரா தனுஷ்? மகளிர் அணிக்கு வெள்ளி விளக்கு பரிசு!

 
தனுஷ்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 'தனுஷ் நற்பணி இயக்க' மகளிர் அணி நிர்வாகிகளின் சந்திப்புக் கூட்டத்தில், பங்கேற்ற பெண்களுக்கு நடிகர் தனுஷ் வெள்ளி காமாட்சி விளக்குகளைப் பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தைத் 'தனுஷ் நற்பணி இயக்கம்' எனப் பெயர் மாற்றி, தொகுதி வாரியாகச் சீரமைத்த தனுஷ், அதன் முதற்கட்டமாக மகளிர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்துச் கலந்துரையாடினார்.

தனுஷ்

இந்த விழாவில் கலந்து கொண்ட சுமார் 3,000 பெண் நிர்வாகிகளுக்குத் தலா 20 கிராம் எடையுள்ள வெள்ளி காமாட்சி அம்மன் விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. தற்போதைய சந்தை விலை மற்றும் ஜிஎஸ்டி கணக்கீட்டின்படி ஒரு விளக்கின் மதிப்பு சுமார் ரூ.5,000 என மதிப்பிடப்பட்டால், இந்த விளக்குகளின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசிய தனுஷ், "பெண்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும்; அனைவரும் பார்த்துப் பத்திரமாக வீட்டிற்குச் செல்லுங்கள்" என சுருக்கமாக 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

தனுஷ்

அரசியல் ரீதியான கருத்துக்கள் எதையும் அவர் வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், தனுஷின் இந்தத் திடீர் நற்பணி இயக்கச் சீரமைப்பும், மகளிரணிக்கு வழங்கப்பட்ட கோடிக் கணக்கிலான பரிசுகளும் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வின் தொடக்கமா என்ற விவாதத்தைத் திரை மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.