ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுக? அதிமுகவினர் முற்றுகை - நேருக்கு நேர் மோதியதால் கொடைக்கானலில் பரபரப்பு!
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இன்று தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. நாயுடுபுரம் பகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதிமுக - திமுக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள 2 வார்டுகளுக்கு உட்பட்ட 5 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள மறைவான இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்கு ரகசியமாகப் பணம் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.

இதனைத் தட்டிக்கேட்ட அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்க முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும், பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் புகார்கள் குவிந்து வரும் நிலையில், கொடைக்கானல் பகுதியில் கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டுக்குப் பணம் கொடுத்தது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
