"விஜய்யிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? கட்சிக்காகச் சொத்துகளை விற்றவன் நான்" - வைகோ ஆவேசம்!

 
வைகோ

"தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும், முதலமைச்சருமான விஜயிடம் நான் 50 கோடி ரூபாய் வாங்கியதாகத் திமுகவினர் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள்" என்று மறுப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தம்மீது சுமத்தப்படும் அரசியல் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடிகளைத் தந்தார். 

"திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மதிமுகவை மிகவும் அவமதிக்கும் வகையில் பொதுமேடைகளில் பேசியுள்ளார். எங்களை இவ்வளவு கேவலமாக நடத்திய பிறகும் நாங்கள் எப்படி அந்தக் கூட்டணியில் நீடிக்க முடியும்? அதனால்தான் தவெக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்."

வைகோ

திமுகவினர் தம்மீது பரப்பி வரும் பணக் குற்றச்சாட்டுகளை வைகோ முற்றிலுமாக நிராகரித்தார். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய உடனே, முதலமைச்சர் விஜயிடம் நான் 50 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டணியை முறித்துக் கொண்டேன் என்று திமுகவினர் மிகவும் அபாண்டமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சுயநலத்திற்காகப் பணம் வாங்கும் அரசியல்வாதி நான் அல்ல. இந்த மதிமுக இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்காகவும், அதைத் தொய்வின்றி நடத்துவதற்காகவும் எனது சொந்தச் சொத்துகளை விற்றவன் நான் என்பது ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் தெரியும்.

வைகோ

திருமண நிகழ்வில் ஸ்டாலின் புறக்கணித்தது மற்றும் மதிமுக எம்.எல்.ஏ இராசேந்திரன் ராஜினாமா செய்ய மறுத்தது போன்ற அடுத்தடுத்த திருப்பங்களுக்கு மத்தியில், தவெக தரப்பிலிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு வைகோ தற்பொழுது அளித்துள்ள இந்த ஆவேசமான விளக்கம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.