மு.க.ஸ்டாலின் தோற்றாரா? தோற்கடிக்கப்பட்டாரா? - நடிகர் பிரகாஷ் ராஜ்
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த விவகாரம் குறித்தும், தேர்தலில் 'SIR' காரணி தாக்கம் செலுத்தியதா என்பது குறித்தும் தீவிரமான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், மு.க.ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போன்ற முக்கியத் தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தது தமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் உண்மையாகவே தேர்தலில் தோற்றாரா அல்லது திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டாரா என்பது குறித்து விரிவான மற்றும் ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் 'SIR' காரணி ஏதேனும் வேலை செய்துள்ளதா என்பது குறித்தும், தேர்தல் முடிவுகள் இந்த அளவுக்கு மாறக் காரணமான சூழ்நிலைகள் பற்றியும் தீவிரமாக அலசி ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் ஏன் இத்தகையதொரு தேர்தல் முடிவை எடுத்தார்கள் என்பதன் பின்னணியை அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் சுட்டிக்காட்டினார்.
