“ராகுல் காந்திக்கு வயநாட்டில் ஓட்டு இருந்ததா?” - கார்த்தி சிதம்பரத்திற்குச் சீமான் சரமாரி கேள்வி!

 
கார்த்தி சிதம்பரம் சீமான் கார்த்தி சிதம்பரம் சீமான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீமானை நோக்கி, "அவர் ஒரு வெளியூர் காரர்; அவருக்கு இங்கு ஓட்டு கூட இல்லை" என காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த சீமான், "சொந்த ஊரில் தான் போட்டியிட வேண்டும் என்றால், உங்கள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டாரே. அங்கு அவருக்கு வீடும், ஓட்டும் இருந்ததா? அப்போது வராத கேள்வி இப்போது ஏன் வருகிறது?"

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

"இந்தியா ஒரு நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தேசிய ஒருமைப்பாடு பேசும் நீங்கள், ஒரு தமிழன் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் போட்டியிடுவதை எப்படி விமர்சிக்கலாம்? உங்கள் தேசிய ஒருமைப்பாடு இப்போது எங்கே போனது?"

தொடர்ந்து பேசிய அவர், "நான் காரைக்குடியில் போட்டியிடுவதைக் கண்டு உங்களுக்கு ஏன் இவ்வளவு நடுக்கம்? ஒரு சாதாரணத் தமிழன் மண்ணின் மைந்தனாக இங்கு நிற்கிறேன். இந்த பயமும் நடுக்கமும் உங்களுக்குத் தேர்தல் முடியும் வரை அப்படியே இருக்கட்டும். மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

சீமான்

சீமான் காரைக்குடியில் களம் காண்பது அந்தத் தொகுதியைத் நட்சத்திரத் தொகுதியாக மாற்றியுள்ளது. காங்கிரஸ், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, கார்த்தி சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடியில் சீமான் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருவது காங்கிரஸ் முகாமை யோசிக்க வைத்துள்ளது.

சிவகங்கை மண்ணின் மைந்தன் என்ற அடையாளத்துடன் சீமான் முன்வைக்கும் இந்த வாதங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.