சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டுக்கும் கொடியேற்றுவதில் இதுதான் வித்தியாசம்!
இந்தியா முழுவதும் இன்று ஆகஸ்ட் 15ம் தேதி வியாழக்கிழமை 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் எல்லாம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று காலை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழகத்தை பொறுத்தவரை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.ஸ்டாலின் கொடியேற்றி உரை நிகழ்த்தினார்.
பொதுவாகவே சுதந்திர தினம், குடியரசு தினம் என இரண்டு நாட்களிலும் தேசியக்கொடியை ஏற்றுவதாகவே எல்லோரும் குறிப்பிடுகிறோம்.

ஆனால் அது தவறு. சுதந்திர தினத்தன்று கொடியேற்றப்படும், குடியரசு தின நாளில் கொடி அவிழ்க்கப்படும். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையிலும், மாநிலங்களில் அந்தந்த முதலமைச்சர்களும் கொடியேற்றுவார்கள். குடியரசு நாளில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்களும் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. சுதந்திர தினத்தில் தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் கீழிருந்து மேலேற்றப்படும். காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா முழு சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் தேசியக்கொடி கீழிருந்து பறந்தவாறு மேலேற்றப்படும்.

ஆனால் குடியரசு நாளில் கொடிக்கம்பத்தின் மேல் கொடி மூடப்பட்டு கட்டப்பட்டிருக்கும். அதனை அவிழ்க்கும்போது கொடி பறக்கும். காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இறையாண்மை மற்றும் ஜனநாயக குடியரசு நாடாக செயல்படுவோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு கொடி மேலேயே அவிழ்க்கப்படும்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இந்திய தேசியக் கொடியை ஆகஸ்ட் 15ம் தேதி ஏற்றினார். 1950ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக மலர்ந்த ஜனவரி 26ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தேசியக் கொடியை அவிழ்த்து பறக்கவிட்டார். சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையிலும், குடிரயரசு தினத்தன்று ராஜ்பாத்திலும் கொடியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
