போலி உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் ஆயுள் கைதி விடுதலை - சிறைத்துறை டிஐஜி கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனைக் கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்போதைய சிறைக் கண்காணிப்பாளரும், தற்போதைய டி.ஐ.ஜி.யுமான எம். சோமசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்ற கைதி, கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி விடுதலை உத்தரவு மூலம் சிறையிலிருந்து தப்பியுள்ளான்.

சமீபத்தில் சிறையின் தற்போதைய பொறுப்புக் கண்காணிப்பாளர் மேற்கொண்ட முரண்பாடு ஆய்வின் போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த மே 20, 2026 அன்று பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. டெல்லி உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த ஆவணம் போலியானது என்பது உறுதியானது.
கைதி விடுதலையான போது பெங்களூரு மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவரும், தற்போது சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் வடக்கு மண்டல டி.ஐ.ஜி.யுமான எம். சோமசேகர், விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் கடந்த அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 9 ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதி சங்கரை விடுவிக்க ரூ.12 லட்சம் கோரப்பட்டு, அதில் ரூ.6 லட்சம் கைமாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் போலி ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்படும் அப்போதைய இரண்டாம் பிரிவு உதவியாளர் ஸ்ரீகாந்த் எஸ். என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதி சங்கரின் விடுதலையைச் சுற்றிய சூழ்நிலைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, தன் கணவனை விடுதலை செய்ய உதவியதாகக் கூறி டி.ஐ.ஜி. சோமசேகர் மீது சங்கரின் மனைவியும் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இவ்வழக்கில் கைதி சங்கர், அவரது மனைவி, உதவியாளர் ஸ்ரீகாந்த் மற்றும் டி.ஐ.ஜி. சோமசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
