தமிழக நகர்ப்புறங்களில் 1 கோடி மரங்களுக்கு 'டிஜிட்டல் ஆதார்'... தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்!
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் சுமார் 1 கோடி மரங்களுக்குப் பிரத்யேக அடையாள எண் (டிஜிட்டல் ஆதார்) வழங்கும் 'நகர்ப்புற மரங்கள் தகவல் அமைப்பு 2.0' என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்க மற்றும் கணக்கெடுப்புப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள் வரும் நவம்பர் 13-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன மென்பொருள் மூலம் ஒவ்வொரு மரத்தின் பிரத்யேக அடையாள எண், மரம் அமைந்துள்ள ஜிபிஎஸ் இருப்பிடம், புகைப்படம், மரத்தின் பெயர், உத்தேச வயது, உயரம் மற்றும் அந்த மரத்தால் கிடைக்கும் சுற்றுச்சூழல் பயன்கள் அனைத்தும் விரிவாகப் பதிவு செய்யப்படும்.
நகரங்களில் எந்தெந்த பகுதிகளில் மரங்கள் குறைவாக உள்ளன, எங்கு புதிய கன்றுகளை நட வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய உதவும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மரங்களின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படும். அரசால் கணக்கெடுக்கப்பட்ட மரம் ஒன்று வெட்டப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தானியங்கி தகவல் சென்றுவிடும்.

மழை மற்றும் புயல் காலங்களில் பலவீனமாக இருக்கும் மரங்கள் மற்றும் அபாயகரமாக விழக்கூடிய நிலையில் உள்ள மரங்களை முன்கூட்டியே கண்டறிந்து அசம்பாவிதங்களைத் தடுக்கலாம்.
பொதுமக்கள் தங்கள் பகுதி அல்லது தெருக்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டால், அதனைப் புகைப்படம் எடுத்து இந்த மென்பொருள் செயலியில் பதிவேற்றம் செய்ய முடியும். இதன் மூலம் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து மரங்களையும் அரசின் நேரடிப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
