உட்கட்சிப் பூசல்: திண்டுக்கல் மாவட்ட அமமுக செயலாளர் கே.பி.நல்லசாமி நீக்கம்!

 
திண்டுக்கல் அமமுக கே.பி.நல்லசாமி திண்டுக்கல் அமமுக கே.பி.நல்லசாமி

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல்களும், அதிருப்தி நிர்வாகிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை பாய்வதும் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பி.நல்லசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக விடுக்கப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றுவெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.பி.நல்லசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென் மாவட்டங்களில் கட்சி வலுவிழப்பதைத் தடுக்கவும், நிர்வாகிகளைத் தக்கவைக்கவும் கட்சித் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அண்மையில் முடிந்த பொதுத்தேர்தலில் அதிமுக - பாஜாக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அமமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் முக்கியப் புள்ளிகள் பலர் கட்சித் தலைமைக்கு எதிராகவும், மாற்று முகாம்களை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே சில மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் மீது பதவி பறிப்பு மற்றும் நீக்க நடவடிக்கைகள் பாய்ந்துள்ள சூழலில், தற்போது திண்டுக்கல்லின் முக்கிய முகமாக இருந்த கே.பி.நல்லசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்குப் பதிலாக திண்டுக்கல் மாவட்டத்திற்குப் புதிய பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தலைமை கழகம் குறிப்பிட்டுள்ளது.