மனைவி கண்முன்னே கணவனை வெட்டிக்கொன்ற கும்பல் - திண்டுக்கல்லில் பரபரப்பு

 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவரை காரில் வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்ரன். இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தி.மு.க. பிரமுகர் முருகன் என்பவரை காரில் கடத்தி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஜாமீன் நிபந்தனையின்படி சாணார்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று வீரபத்ரன் தனது மனைவி மாரியம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்றபோது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.இதில் நிலைதடுமாறி வீரபத்ரனும் அவரது மனைவியும் சாலையில் கீழே விழுந்துள்ளனர். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், வீரபத்ரனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் கண்முன்னே நடைபெற்ற இந்த தாக்குதலில் வீரபத்ரனின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீரபத்ரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.வீரபத்ரன் ஏற்கனவே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.