பக்தர்கள் அதிர்ச்சி ... பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்கள் உயர்த்த திட்டம்!

 
பழனி பழனி

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பிரசாதமாக உலக புகழ்பெற்ற பஞ்சாமிர்தத்தை மிகவும் ஆவலோடு வாங்கி செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக பஞ்சாமிர்தத்தின் விலையை கணிசமாக உயர்த்த கோவில் நிர்வாகம்    முடிவு செய்துள்ளது.

பழனி

அதன்படி இதுவரை 45 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த அரை கிலோ பஞ்சாமிர்தம் டப்பா இனி 60 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய டப்பா 30 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. இதேபோல் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2,000 ரூபாயாக இருந்த மாலை நேர தங்கரத புறப்பாட்டு கட்டணமும் தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக 2,500 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் இந்த திடீர் கட்டண உயர்வு அறிவிப்பு முருக பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி தேரோட்டம் தைப்பூசம் பங்குனி உத்திரம்

இந்த கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களின் கருத்துக்களை அடுத்த மாதம் ஜூலை 11-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கோவில் தலைமை அலுவலகத்தில் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது. தங்கரத கட்டண உயர்வுக்கான கருத்துக்களை ஜூலை 7-ந்தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த புதிய கட்டண உயர்வு இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.