பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை... கள்ளக்காதலால் விபரீதம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த 34 வயதுடைய காளீஸ்வரி என்ற பெண்மணி, நேற்று அதிகாலை நேரத்தில் அங்குள்ள ஒரு முட்புதரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் கல்லைப் போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், காளீஸ்வரியைக் கொலை செய்தது அவரது கள்ளக்காதலன் மகுடேஸ்வரன் என்பது தெரியவந்தது. காளீஸ்வரியின் கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், அவரைப் பிரிந்து மகுடேஸ்வரனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குரு என்பவருடனும் காளீஸ்வரிக்குத் தொடர்பு ஏற்பட்டு, அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதால் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு காளீஸ்வரியும் மகுடேஸ்வரனும் புதர் பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது குருவுடனான தொடர்பைக் கைவிடுமாறு மகுடேஸ்வரன் எச்சரித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகுடேஸ்வரன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து காளீஸ்வரியின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்குற்றத்திற்காக மகுடேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
