இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்.. இன்று மதுரையில் இறுதிச்சடங்கு!

 
சேரன் சேரன்

இயக்குனர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் (84) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்குகள் இன்று மதுரையில் நடைபெற உள்ள நிலையில், திரையுலகினர் இயக்குநர் சேரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சேரனின் நண்பர்கள் இறுதிசடங்க் நிகழ்வில் கலந்துக் கொள்ள மதுரை விரைந்துள்ளனர். 

'பாரதி கண்ணம்மா', 'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி',  'ஆட்டோகிராஃப்', 'தவமாய் தவமிருந்து'  என தமிழ் மக்களின் வாழ்வியலுடன் கலந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்கிய இயக்குனர் சேரன், தனது திரைப்படங்களில் குடும்ப உறவுகளின் மேன்மையை அழகாகச் சித்தரிப்பதை இன்று வரையில் கைக்கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த சேரனின் தாயார் கமலா பாண்டியன் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. தாயாரின் திடீர் மறைவால் நிலைகுலந்து போயிருக்கும் இயக்குனர் சேரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் திரை உலகைச் சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் சேரனின் ரசிகர்கள் அவருக்குத் தங்களின் ஆறுதல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மறைந்த கமலா பாண்டியனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் இயக்குனர் சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டி கிராமத்தில் இன்று முறைப்படி நடைபெற உள்ளது. தாயை இழந்து வாடும் இயக்குனர் சேரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தமிழ் நெஞ்சங்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்!