முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜின் இறுதிப் பயணம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!
இயக்குநர் கே.பாக்யராஜின் தமிழ் சினிமா மற்றும் சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்குத் தமிழக அரசின் முழு 'அரசு மரியாதை' வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அரசாணை பிறப்பித்துள்ளார். அரசு மரியாதை குறித்த அறிவிப்புடன், மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் பன்முகத் திறமைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 27, 2026
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த… pic.twitter.com/Nun0KZ3biV
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு. கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு. கே. பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்."

எம்.ஜி.ஆரின் கலைவாரிசு முதல் திமுக வரையிலான தனது நீண்ட நெடிய அரசியல் மற்றும் அசாத்திய சினிமா பயணத்தை முடித்துக் கொண்டுள்ள கே.பாக்யராஜின் உடலுக்கு, காவல் துறையின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படவுள்ள செய்தி ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
