"பேசும் படம்", "அபூர்வ சகோதரர்கள்" தந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் - திரைையுலகில் பேரிழப்பு:

 
சிங்கீதம் சீனிவாசராவ்

இந்தியத் திரையுலகில் பல புதுமையான படைப்புகளைத் தந்து புகழ்பெற்ற பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (95) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் சிகிச்சை பலனின்றிப் பிரிந்தது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரியில் 1931 செப்டம்பர் 21-ல் பிறந்த இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குநராகத் தன் பயணத்தைத் தொடங்கி, தெலுங்கில் 'நீதி நிஜாயிதி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழில் இவர் இயக்கிய முதல் படமான 'திக்கற்ற பார்வதி' படத்திற்கே தேசிய விருது கிடைத்தது. மேலும், மௌனப் படமான 'புஷ்பக விமானா' உள்ளிட்ட படங்களுக்காக இருமுறை தேசிய விருதும், 6 முறை ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றுள்ளார்.

கமல்ஹாசனின் 100-வது படமான 'ராஜ பார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்', இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான 'ஆதித்யா 369' உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தன் 94 வயதில் 'சிங் கீதம்' என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு, ஹாலிவுட் இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் சாதனையை முறியடித்தவர் இவர். சென்னையில் வசித்து வந்த இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. இவரின் மறைவு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே பெரும் இழப்பாகும்.