என் கனவை சிதைத்துவிட்டார்கள் - இயக்குநர் விக்னேஷ் சிவன் வேதனை
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தான் இயக்கிய திரைப்படம் எதிர்பார்த்த வசூலை எட்டாதது குறித்தும், அதற்குப் பின்னணியில் இருந்த இணையதளங்களின் அதீத எதிர்மறை விமர்சனங்கள் குறித்தும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ரூ.300 கோடி வசூலை எட்ட வேண்டும் என்ற தனது கனவையும், எதிர்பார்த்த ரூ.100 கோடி இலக்கையும் இணையதளங்களின் அதீத நெகட்டிவ் விமர்சனங்கள் சிதைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பல சவால்களைக் கடந்து திரையரங்கிற்கு வந்த இத்திரைப்படத்தை, இணையதளங்களில் பரப்பப்பட்ட எதிர்மறையான கருத்துக்கள் பார்வையாளர்கள் தியேட்டருக்கு வருவதைத் தடுத்துவிட்டதாக அவர் வருத்தமடைந்துள்ளார். படம் நன்றாக இருந்தும், திட்டமிட்டு பரப்பப்படும் இதுபோன்ற விமர்சனங்களால் ஒட்டுமொத்தப் படக்குழுவின் உழைப்பும் பாதிக்கப்படுவதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களுக்கு இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் எழுதப்படும் விமர்சனங்கள், தியேட்டர் வசூலை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்ற விவாதம் கோலிவுட்டில் மீண்டும் எழுந்துள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
