மகளிருக்கு ஏமாற்றம்.. 'ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உடனே கிடைக்க வாய்ப்பில்லை'!

 
மகளிர் உரிமைத் தொகை மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது முக்கியத் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது முழுமையாக வழங்கப்படும் என்று பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அதற்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தவெக தங்களது தேர்தல் அறிக்கையில், தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைந்த பிறகு தற்போது வரை மகளிரின் வங்கிக் கணக்குகளில் பழைய நடைமுறைப்படியே மாதம் ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, பட்ஜெட் தாக்கலின் போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை பணம் ரொக்கம் ரூபாய்

இந்நிலையில், நேற்று தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டது. அந்த அறிக்கை பெண்களின் பெரும் எதிர்பார்ப்பிற்குப் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் நிதிநிலை மற்றும் கடன் சுமை மிகக் கடுமையான சூழலில் இருப்பதை அந்த வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அரசு தனது வருவாய்ச் செலவுகளை பெருமளவு கட்டுப்படுத்தி, சாலைகள், பாலங்கள் போன்ற மூலதன உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரித்தால் மட்டுமே 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியும் என்று அந்த வெள்ளை அறிக்கையில் வலுவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு உதவித்தொகை தமிழக அரசு விஜய்

வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, மகளிருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டபடி மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் தற்போதைக்கு உடனடியாகச் சாத்தியமில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் நிதிநிலை சீராகும் வரை இந்த கூடுதல் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மேலும் சில மாதங்களுக்குத் தள்ளிப்போகவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் ஜூன் 22 சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுகுறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஏதேனும் மாற்று அறிவிப்பை வெளியிடுவாரா என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களும் உற்றுநோக்கத் தொடங்கியுள்ளனர்.