வெனிசுலாவில் பேரழிவு.. பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு; தேசிய அவசரநிலை பிரகடனம்!

 
நிலநடுக்கம் வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை உலுக்கிய ஒரு நூற்றாண்டு காலத்தின் மிக மோசமான இரட்டை நிலநடுக்கப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 920 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் அங்குப் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வெனிசுலாவில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கின. ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக இந்த இரட்டை பூகம்பங்கள் பதிவாகின. வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்த இந்த அடுத்தடுத்த அதிர்வுகள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளன.

தலைநகர் கராகசில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரான லாகுவைராவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தலைநகர் உட்பட நாடு முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது.

வெனிசுலா நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் கொடூரத் தாக்கத்தால் தலைநகர் கராகஸ் மற்றும் லாகுவைரா ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து தரைமட்டமாகின.

நாட்டின் முக்கிய சர்வதேச நுழைவாயிலான மைகுயெட்டியா விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் பல இடங்களில் இரண்டாகப் பிளந்தன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கின. பயந்துபோன பொதுமக்கள் தங்களது வளர்ப்புப் பிராணிகளுடன் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பேரழிவின் கொடூரத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உடனடியாக தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிரோடு மீட்பதற்கான நடவடிக்கைகளை ராணுவமும் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட அவர் உத்தரவிட்டுள்ளார். பேரழிவால் தவிக்கும் வெனிசுலாவுக்குச் சர்வதேச நாடுகள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளன.

வெனிசுலா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெனிசுலா மக்களுக்குத் தேவையான அவசரப் பேரிடர் உதவிக் குழு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் சிறப்புச் செயல்குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் கிரிஸ்டோபர் லன்டாவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெனிசுலா நிலநடுக்கம்

பிரேசில், எல் சல்வடார், கியூபா மற்றும் டொமினிகன் குடியரசு உள்ளிட்ட நாடுகள் தங்களது முதற்கட்ட பேரிடர்கால மீட்புப் படைகளையும் அவசர உதவிகளையும் உடனடியாக வெனிசுலாவிற்கு அனுப்பி வைத்துள்ளன. தற்போதைய அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டவர்களில் 589 பேர் உயிரிழந்துள்ளதாக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் 2,980 பேர் படுகாயமடைந்து அவசரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், நூற்றுக்கணக்கான பிரம்மாண்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதால், இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தப் பலி எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டக்கூடும் என அமெரிக்கப் புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.