டிஸ்கோ இசை ஜாம்பவான் மோண்டி ராக் III காலமானார்... ஒரு சகாப்தம் முடிவு!

 
டிஸ்கோ மோண்டி ராக்

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகரும், பொழுதுபோக்கு கலைஞருமான மோண்டி ராக் III (Monti Rock III) தனது 86-வது வயதில் காலமானார். 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மிகவும் பிரபலமான பாடகரும், 'டிஸ்கோ' இசையின் முன்னோடிகளில் ஒருவருமான மோண்டி ராக் III, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

1970-களில் உலகம் முழுவதும் டிஸ்கோ இசைப் பரவியபோது, அதில் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, 'சாட்டர்டே நைட் ஃபீவர்' போன்ற புகழ்பெற்ற ஆல்பங்களில் இவரது பங்களிப்பு மகத்தானது. இவர் ஒரு பாடகர் மட்டுமல்லாது, சிறந்த சிகையலங்கார நிபுணராகவும், பின்னணிப் பாடகராகவும், தொலைக்காட்சி விவாத மேடைகளில் கலகலப்பாகப் பேசும் ஆளுமையாகவும் விளங்கியவர்.

டிவி ஷோக்களின் நாயகன்: 'The Merv Griffin Show' மற்றும் 'The Tonight Show' போன்ற புகழ்பெற்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட முறை கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். மறக்க முடியாத கதாபாத்திரம்: 1977-ல் வெளிவந்த 'சாட்டர் டே நைட் ஃபீவர்' திரைப்படத்தில் டிஸ்கோ டிஜே-வாக இவர் நடித்த கதாபாத்திரம் இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தனது வாழ்வின் பெரும்பகுதியை லாஸ் வேகாஸ் நகரில் கழித்த இவர், அங்குள்ள உணவகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 86-வது வயதில் இயற்கை எய்தினார்.

அவரது மறைவு குறித்து இசைத்துறையினர் கூறுகையில், "மோண்டி ராக் வெறும் பாடகர் மட்டுமல்ல, அவர் ஒரு ஆற்றல்மிக்க கலைஞர். மேடையில் அவர் தோன்றிவிட்டாலே அந்த இடமே உற்சாகமாகிவிடும்" எனப் புகழாரம் சூட்டியுள்ளனர்.