"தலைவர்களை AI மூலம் இழிவுபடுத்துவதா?" - மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!

 
சிபிஎம் மு.வீரபாண்டியன் சிபிஎம் மு.வீரபாண்டியன்

"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் ஆகியோரை சமூக ஊடகங்களில் அநாகரிகமாகச் சித்தரிப்பது கடும் கண்டனத்திற்குரியது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கொந்தளித்துள்ளார்.

தற்போதுள்ள டிஜிட்டல் உலகில் டீப்ஃபேக் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே வேளையில், அதனைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகிய இருவரையும் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மிகவும் அநாகரிகமான முறையில் சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்களும், புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் விவகாரம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "உயர் பொறுப்பில் உள்ள மற்றும் மக்கள் மதிக்கும் தலைவர்களை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக இழிவுபடுத்தும் இத்தகைய தரம் தாழ்ந்த செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இது அப்பட்டமான ஒரு அறிவற்ற செயலாகும். மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் அதனை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தலைவர்களின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது."

மேலும், "சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இதுபோன்ற டிஜிட்டல் குற்றங்களை வெறும் அரசியல் ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது. ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பிற்குச் சவாலாக விளங்கும் இந்த அநாகரிகச் செயல்களை, அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்" என்றும் மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.