மதுபோதையில் தகராறு.. மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசி வாலிபர் கொலை, 3 பேர் கைது!

 
கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொடூரமான முறையில் தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (23). நேற்று இரவு இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களும் சேர்ந்து ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவர்களுக்குள் எதிர்பாராத விதமாகத் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால், இந்த வாக்குவாதம் விவாதமாக மாறி கைக்கலப்பாக உருவெடுத்தது. இதில் ஆத்திரமடைந்த அங்கிருந்த நபர்கள், துரையைச் சரமாரியாகத் தாக்கியதுடன் நில்லாமல், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர்.

உயரமான மொட்டை மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்த துரைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த தண்டராம்பட்டு போலீஸார், துரையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, துரையுடன் மது அருந்திய அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா (22), ராஜேஷ் (25), அசோக் (26) ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து வீசிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பி.குயிலம் கிராமத்தில் தற்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.