மதுபோதையில் தகராறு... ரவுடி கோகுலை வெட்டிக் கொன்ற நண்பர்கள் 4 பேர் கைது!

 
பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 4 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். பெரியபாளையம் அருகே உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்த கோகுல் (26) என்பவர் கொல்லப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட கோகுல் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு மற்றும் பல அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற கோகுல், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை பெரியபாளையம் அருகே தண்டுமா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில், அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கோகுலின் தலை, முகம், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் அரிவாளால் மிகக் கொடூரமாக வெட்டப்பட்டிருந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தி காதலன் கொலை

போலீசார் நடத்திய மின்னல் வேக விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தீனா (22), சிவக்குமார் (21), பேரரசு (20), தியாகராஜன் (19) ஆகிய 4 இளைஞர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதே இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் அரிவாள் வெட்டில் முடிந்து, கோகுல் கொல்லப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.