“எடப்பாடியைத் தகுதி நீக்கம் செய்க!” - விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி பேட்டி - அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்!

 
“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி “இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

அதிமுக-வின் உட்கட்சிப் பூசல் இப்போது வீதிக்கு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், அவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று எஸ்.பி.வேலுமணியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், "தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளிப்பதாக நாங்கள் எடுத்த முடிவு, கட்சியின் நலன் சார்ந்தது. ஆனால், இபிஎஸ் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் தான் கொறடா உத்தரவை மதிக்காமல் செயல்படுகின்றனர். எனவே, அவர்கள் மீதுதான் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சிப் பதவிகளைப் பறிக்க இபிஎஸ்-க்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்சியில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்."

எடப்பாடி

அதிமுக-வின் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், இபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப் புதிய கொறடாவாக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. இதற்குப் போட்டியாக விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி தரப்பும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது. 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜயபாஸ்கர் - வேலுமணி பக்கம் இருப்பதால், சட்டப்பேரவையில் அதிமுக-வின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கேள்விக்குறியாகியுள்ளது.

விஜயபாஸ்கர் ரெய்டு வேலுமணி

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகுதி நீக்கம் செய்யக் கோருவதால், இந்த விவகாரத்தில் சபாநாயகரின் முடிவே இறுதியானது. தங்களது ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள வேலுமணி தரப்பிற்குப் புதிய அரசில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு ஆளுங்கட்சிக்குச் சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.