பாஜக மீது அதிருப்தி... தவெகவில் இணைகிறார் விஜயதாரணி!
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பா.ஜ.கவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, அக்கட்சியில் இருந்து விலகி தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்திற்கு அவர் ஏற்கனவே வருகை தந்துள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையை ஒட்டியுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தனது பதவிக்காலம் முடியும் முன்பே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன், தனது எம்.எல்.ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக விஜயதாரணி களம் இறங்கினார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீனும், த.வெ.க சார்பில் கே.மைக்கேல் குமாரும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.பிரவீன், த.வெ.க வேட்பாளரை விட 20,970 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார். மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதாரணிக்கு இந்தத் தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி திடீரென கட்சி மாறியது, விளவங்கோடு உள்ளூர் மக்களிடையே அவரது செல்வாக்கு சரிவதற்குக் காரணியாக அமைந்தது. பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் அனைத்தும் வழக்கம் போல் 'கை' சின்னத்திற்கே சென்றன. அதே நேரத்தில், தேர்தல் களத்தில் பா.ஜ.க-வின் உள்ளூர் நிர்வாகிகள் தனக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என விஜயதாரணி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தத் தொகுதியில் பாரம்பரியமாக விழும் பா.ஜ.க-வின் வாக்குகளைப் பெருமளவில் புதிய கட்சியான த.வெ.க-வே அள்ளியிருந்தது தேர்தல் தரவுகள் மூலம் தெரியவந்தது. தேர்தல் தோல்விக்கு பிறகும் பா.ஜ.க தலைமையில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் எதுவும் வழங்கப்படாததால் விஜயதாரணி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

பா.ஜ.க-வில் நீடித்த அதிருப்தி காரணமாக அக்கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்த விஜயதாரணி, தற்போதைய ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணையச் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
விஜயதாரணியுடன் சேர்த்து அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலகங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் இன்று த.வெ.க-வில் இணையவுள்ளனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகும் பிற கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் த.வெ.க-வை நோக்கி வருவது தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
