குளறுபடிகளால் அதிருப்தி - CM விஜய் தொடங்கி வைத்த மாரத்தானில் வாக்குவாதம்!

 
மாரத்தான்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்போட்டியை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததோடு, அவரே களமிறங்கி 6 கிலோமீட்டர் தூரம் முழுமையாக ஓடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த மாரத்தான் விழா நடைபெற்ற சென்னை மெரினா மைதானத்தில் நிர்வாகக் குளறுபடிகளால் பெரும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

'நமது தமிழ்நாடு – போதைப்பொருள் இல்லாத மாநிலம்' என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் பங்கேற்கச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் திரண்டனர். இருப்பினும், விழா ஏற்பாட்டாளர்களின் போதிய திட்டமிடல் மற்றும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக, அங்கு வந்த பொதுமக்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

போட்டியில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்திருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ டி-ஷர்ட்டுகள் சரிவர விநியோகிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டி-ஷர்ட் வழங்கப்பட்டதால், நீண்ட வரிசையில் நின்ற மற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மா

மேலும், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற முக்கியப் பகுதிக்கு அருகில் ஓடுவதற்குப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, முறைப்படி பதிவு செய்திருந்த பல பொதுமக்களைக் காவல் துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தங்களுக்கு டி-ஷர்ட்டும் வழங்காமல், உள்ளே ஓடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உயர் காவல் அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். "அதிகாலையிலேயே விழிப்புணர்வுக்காக ஓட வந்த எங்களை அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம்?" எனக் கூறிப் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரைச் சாலைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி மாற்றுப் பாதையில் ஓடுவதற்கு வழிவகை செய்தனர்.