"முதலமைச்சர் மாஃபியா கம்பெனி நடத்துகிறார்" - திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!

 
திவ்யா சத்யராஜ் திவ்யா சத்யராஜ்

தமிழக முதலமைச்சர் விஜய் மாஃபியா கம்பெனி நடத்தி வருவதாகவும், அவரின் அடியாள் ஒருவரால் பல இளம்பெண்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலரும், திமுக நிர்வாகியுமான திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரை முதலமைச்சரின் 'அடியாள்' என்று  வெளிப்படையாகச் சாடியுள்ளார். திரைத்துறையில் பெரிய அளவில் வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி, அந்த நபர் பல அப்பாவி இளம்பெண்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாகவும், அவர்களுக்குப் பாலியல் ரீதியாகப் பெரும் கொடுமைகளை இழைத்துள்ளார் என்றும் திவ்யா சத்யராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

திவ்யா விஜய்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தற்போதைய அரசு காட்டும் அலட்சியப் போக்கு குறித்துப் பேசிய அவர், முந்தைய திமுக அரசுடன் தவெக அரசின் செயல்பாடுகளை ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு எதிராக ஏதேனும் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், காவல்துறை உடனடியாகக் களத்தில் இறங்கி, குற்றவாளிகளுக்கு எதிராக உடனுக்குடன் சட்ட ரீதியான தீர்வுகளையும் தக்காண தண்டனைகளையும் பெற்றுத் தந்தது.

ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக் குறைந்தது 6 மாதங்கள் வரை மிக நீண்ட காலதாமதம் ஆகிறது. குற்றவாளிகளைக் காப்பதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள திவ்யா சத்யராஜ், முதலமைச்சர் விஜய் ஒரு மாநிலத்தின் அரசை நடத்தாமல், சொந்தமாக 'மாஃபியா கம்பெனி' ஒன்றை நடத்தி வருகிறார் என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். பெண்களை ஏமாற்றிய அந்த அடியாள் மீது முதலமைச்சர் உடனடியாகச் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பாதிக்கப்பட்ட பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.