தீபாவளி பட்டாசு விபத்து: கண் பாதிப்புடன் 1,464 பேர் சிகிச்சை... மதுரையில் மட்டும் 213 பேர் பாதிப்பு!
தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்துகளால் கண்களில் காயமடைந்த 1,464-க்கும் மேற்பட்டோர் அரவிந்த் கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரையில் மட்டும் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் உஷா தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் குழந்தைகளும் கண் காயங்களுக்கு ஆளாகியிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடிப்பதால் கண்களில் சிறிய காயங்கள் முதல் பார்வையைப் பாதிக்கும் அளவிலான கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படலாம். பட்டாசுகளை வெடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் கண் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் பட்டாசுகளைப் பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்றும், குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மருத்துவர் உஷா வலியுறுத்தியுள்ளார்.
